சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக
சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது
ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர்
கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம்
விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை
மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.
அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக
பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...
நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல்
வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து
கொண்டு கமல் பேசுகையில்,
உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும்,
இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள்
வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன்
புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.
எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக
உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள்
உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,
சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க
எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில்
இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம்
பலமாக உள்ளோம்.
நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள்
(பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்,
அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த
சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.
அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப்
பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை
அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர்
பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து
அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக்
காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று
இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா
என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்ளீர்கள்! என்றார்.
இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி
வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.
கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்'
அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment