சென்னை: கமல்ஹாஸனுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையை சரிப்படுத்த
தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ரஜினி.
அரசின் உக்கிரத்தைத் தணிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக உள்ளதாக போயஸ்
தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா இதுவரை பார்க்காத பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. அரசு இதுவரை
இல்லாத அளவு உக்கிரத்துடன் விஸ்வரூபத்தை எதிர்கொண்டுள்ளது. விஸ்வரூபம்
படத்துக்கான தடையை நீக்கி வெளியான தீர்ப்பை, அரசுக்குக் கிடைத்த தோல்வியாக
எடுத்துக் கொண்டுவிட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்குக் காட்சிகள்
அரங்கேறி வருகின்றன.
தீர்ப்பு வெளியாகி இவ்வளவு நேரமாகியும் படத்தை எங்கும் திரையிட
முடியவில்லை. காலை 6 மணியிலிருந்து இந்தப் படத்தைப் பார்க்க பல ரசிகர்கள்
தியேட்டர்களுக்கு வந்து, பார்க்க முடியாமல் திரும்புகின்றனர்.
அரசின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற மனநிலையில் இன்று முழுவதும்
படத்தை வெளியிடாமல் நிறுத்திவைக்கும் முடிவில் உள்ளனர் திரையரங்க
உரிமையாளர்களும்.
நடப்பது அனைத்தையும் பார்த்த கமல்ஹாஸன், தமிழகத்திலிருந்தே வெளியேறி
விடுவதாகக் கூறியுள்ளார்.
கமலுக்கு பிரச்சினை என்றதும் முதலில் குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்
என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான். என்னுடைய 40 ஆண்டுகால நண்பரின்
நிலை கண்டு மனம் கலங்குகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கமலுக்கு மேலும் மேலும் பெருகும் நெருக்கடியைக் கண்டு மனம்
பதறியுள்ள ரஜினி, அவரை இக்கட்டிலிருந்து மீட்கும் முயற்சியில்
இறங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்துத் தரப்பிலும்
பேசி இணக்கமான சூழலை அவர் உருவாக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment