Wednesday, March 13, 2013

லயோலா மூட்டிய லங்கா தீ

மிழ் ஈழச் சொந்தங்களின் கண்ணீரை, தமிழகக் கல்லூரி மாணவர்கள் உணர்ந்ததன் ஆரம்பம்... தமிழ்நாடு தகிக்க ஆரம்பித்துள்ளது. யார் தொடங்குவது என்ற தயக்கத்தில் இருந்ததைப் போல, லயோலா மாணவர்கள் போராடத் தொடங்​கியதும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திங்கள்கிழமையன்று போராட்டத்தில் குதித்து ஈழத் தீயைப் பற்ற வைத்துள்ளனர். 

லயோலா கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்களின் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்​​டத்தைக் கண்டு ஆடிப்போனது அரசாங்கம். இல்லை என்றால் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைது​செய்து இருப்பார்களா?

திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டுப் பேர், கோயம்​பேடு செங்கொடி அரங்கத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க... 10-ம் தேதி பின்னிரவில் அவர்களை அள்ளிச் சென்றனர் காக்கிச் சட்டைகள். கைதுக்கு முன் நம்மிடம் பேசிய அந்த மாணவர்களின் குமுறல்கள் தீர்க்கமாக இருந்தன.

www.thedipaar.com

திலீபன் மற்றும் ரமேஷ் இருவரும் தங்களது கோரிக்கைகளை வரிசைப்படுத்தினர். ''பலரும், அமெரிக்கத் தீர்மானத்தை வலியுறுத்தி​தான் இந்தப் போராட்டம் நடத்து​வதாக நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஐ.நா-வில் அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தில் எந்த இடத்திலுமே 'இனப்படுகொலை’ என்ற வார்த்தையே இல்லை. இதுபோன்ற பல காரணங்களால்தான் அமெரிக்கத் தீர்மானமும் வெறும் நாடகம் என்கிறோம். இலங்கையில் சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்பும் நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிந்து கொண்டுவர வேண்டும். ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து இலங்கை துணைத் தூதரத்தை அகற்ற வேண்டும். மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற எங்கள் கோரிக்கை​களை வலியுறுத்தித்தான் உண்ணாவிரதத்தைத் தொடங்கி இருக்கிறோம்'' என்று வரிசைப்படுத்தினர்.

''இதுபோன்ற எங்களது எட்டுக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் பிரதிநிதி யாராக இருந்தாலும், நேரில் வந்து எங்களது கோரிக்கைகளுக்கு உறுதி அளித்தால்தான், எங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்'' என்று உறுதியாகக் கூறினார் ஜோ.பிரிட்டோ.

மணிகண்டன், ''முதலில் எங்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றுதான் முடிவு செய்தோம். எங்கள் கல்லூரிக்கு அருகி​லேயே இலங்கைத் துணைத் தூதரகம் இருப்பதால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. கல்லூரியில் அமர்ந்து போராட்டம் நடத்துவதைவிட, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடத்தினால், போராட்டம் கூடுதல் வலுப்பெறும் என்று நினைத்தோம். அதனால்தான் முதல் நாள் கல்லூரியிலும் இரண்டாவது நாள் முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள செங்கொடி அரங்கிலும் போராட்டத்தைத் தொடர்கிறோம்'' என்றார்.

''இது முழுக்க முழுக்க மாணவர்களின் போராட்டம். எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்து நாங்கள் இயங்கவில்லை. மாணவர்களை நம்பி இருக்கிறோம். அங்கு இனப் படுகொலை நடந்தபோது வாயை மூடிக்கொண்டு இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் வந்தாலும், அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்றோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார் ஷாஜிபாய் ஆண்டனி.


தொடர்ந்தவர், ''எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதி அளிக்காவிட்டால், நாங்கள் இறுதி வரை போராடுவது உறுதி. ஒருவேளை நாங்கள் இந்தப் போராட்டத்தில் இறந்தால், எங்க உடலை வைத்துக்கொண்டு எங்கள் நண்பர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடருவார்கள். இலங்கைத் தமிழர்க்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை ஓய மாட்டோம்'' என்றார்.

நல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவர்களைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பல தமிழ் அமைப்புகளும் மாணவர்களுக்கு தங்களது முழு ஆதரவை அளித்து வந்தனர். இந்த நிலையில், 10-ம் தேதி பின்னிரவில் மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று ராயப்பேட்டை அரசு மருத்து​வமனையில் சேர்த்தனர். ஆதரவளித்த மாணவர்களை அரும்பாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து, மறுநாள் காலை விடுவித்தனர்.

மாணவர் மனோஜ் நடந்ததை விவரிக்கிறார். ''நள்ளிரவு 2 மணி இருக்கும். உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள்  தூங்கிக்கொண்டு இருந்தனர். நாங்கள் அனைவரும் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென்று பெரிய சத்தம் கேட்க... எல்லோரும் வாசல் கதவை நோக்கி ஓடினோம். அங்கே 200 போலீஸ்காரர்கள் இருந்தனர். அதைப் பார்த்த நாங்கள், கட்டையை வைத்து கதவைத் திறக்க முடியாதபடி தம் கட்டி ஒன்று சேர்ந்து நின்றோம். 'உங்களுக்கு அவ்வளவு திமிராடா?’ எனக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர் போலீஸார். நாற்காலிகளை எல்லாம் அடித்து உதைத்து, லத்தியால் எங்களை எல்லாம் அடித்து தள்ளிவிட்டு, உள்ளே புகுந்து, தரதரவென்று இழுத்து வேனில் ஏற்றினர். உண்ணாவிரதம் இருந்த எட்டு மாணவர்களையும் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பிறகு, அந்த இடத்தில் நாங்கள் கட்டிவைத்திருந்த பேனர் அனைத்தையும் கழட்டி எறிந்து, ஸீல் வைத்தனர். எங்களை சமுதாயக் கூடத்தில் அடைத்தனர். எங்களைக் கைதுசெய்து அடைத்ததால், நாங்கள் பயந்து ஒதுங்கிவிட மாட்டோம். போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இறங்கப்போகிறோம்'' என்றார் ஆவேசமாக. இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதை உணர்ந்து இயக்குநர் வ.கௌதமன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இந்த மாணவர்களுடன் இரவில் தங்கி இருந்துள்ளனர். அவர்களையும் போலீஸார் கைதுசெய்து, அரும்பாக்கம் மண்டபத்தில் அடைத்தனர். மாணவர்கள் அனைவரும் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு​செல்லப்பட்டனர். இந்தத் தகவல் திங்கள் கிழமை அதிகாலை அனைத்து ஊர்களுக்கும் பரவியது.  

இலங்கைக்கு எதிராக லயோலோ கல்லூரி மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு, தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவிவிட்டது!

No comments:

Post a Comment