விடாது காதல் பாகம் 9


விடாது காதல் பாகம் 9


அவன் சென்ற 5 நிமிடத்திலே சங்கரி வந்து விட்டாள். அதை சற்றும் கவனிக்காத ராஜா அலைபேசியில் பேசி கொண்டிருந்தான். மறுமுனையில் ஜான்சி இருக்க ராஜா அதிகமாகவே வழிந்து கொண்டிருந்தான். இவன் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த சங்கரி அவனை தொந்தரவு செய்யாமல் நின்று இருந்தாள். திடீரென்று சங்கரி அருகில் இருப்பதை உணர்ந்த ராஜா அவசர அவசரமாக இணைப்பை துண்டித்தான்.
வந்ததும் வராததுமாக சங்கரி தன் வேலையை ஆரம்பித்தாள்.”என்ன சார் கேர்ள் ஃப்ரெண்ட் டா? எங்ககிட்ட எல்லாம் பேசமாட்டீங்க!!” என ஆரம்பித்தவளை சமாளிக்க தெரியாமல் “சரி கிளம்பலாமா?” என்றான். கேட்டதுக்கு பதில் வரலையே? என்ன காதலா? ச்ச ச்சே!! உனக்கு எங்க அவ்வளவு தைரியம் வர போகுது? என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடர்ந்தாள். எதற்கும் பதிலளிக்க முடியாமல் கிளம்பும் அவசரத்திலே இருந்தான். வண்டியில் ஏறி அமர்ந்ததும் ராஜாவின் தோள் மீது கை வைத்தாள் சங்கரி. அது அவனுக்கு எரிச்சலை தந்தது. வழி எல்லாம் அந்த பேச்சை விடாமல் தொடர்ந்தாள். என்ன தான் ராஜா அவளை ஒதுக்கினாலும் சங்கரி அதை பெரிது படுத்த மாட்டாள். அதற்கு காரணம் சிறுவயதில் இருந்தே சங்கரிக்கு ராஜா என்றாலே ஒரு தனி பிரியம் உண்டு.வீடு சீக்கிரம் வராதா? என்ற எதிர்பார்ப்பிலேயே வண்டியை வேகமாக செலுத்தினான் ராஜா.
ஒரு வழியாக வீட்டை அடைந்த நிம்மதி பெருமூச்சுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ராஜா. இன்முகத்துடன் ஷாலினி அவளை வரவேற்றாள். பழைய தோழியர் இருவர் சந்தித்து கொண்டதில் நேரம், காலம் தெரியாமல் உரையாடி கொண்டிருந்தனர். சங்கரியின் பேச்சுக்கள் அனைத்தும் ராஜாவை சுற்றியே இருந்தது. சங்கரியின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ள முடியாமல் இல்லை ஷாலினிக்கு. அவள் மனதில் ஆழமாக தன் அண்ணன் இருப்பதை அறிந்தும் தானாக எப்படி கேட்பது என கண்டு கொள்ளாமலே இருந்தாள்.
பல வேலைக்களுக்கு நடுவே ராஜா தன் வழக்கமான வேலையை தொடர்ந்து கொண்டிருருந்தான். தன் ஜானுவை அலைபேசியில் குறுஞ்செய்தி மூலமாக தொடர்பு கொண்டிருப்பது தான் அந்த வேலை. சங்கரி அழைத்து வந்து வீட்டில் விட்டதை பற்றி தெரிவிக்க அவள் மனதில் இனம் புரியாத நெருடல் ஏற்பட்டது. அதற்கு மேல் அந்த நேரத்தில் பேச பிடிக்காமல் குறுஞ்செய்தியை நிறுத்தினாள். அன்று இரவு வரை அவனுடன் பேசவே இல்லை. அவளுக்கு ஏதாவது வேலை இருக்கும் என நினைத்து குறுஞ்செய்தி வரும் என எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இரவு தூங்கும் முன் அனுப்பிய “குட் நைட்”கு கூட பதில் வராததை எண்ணி அலைபேசியில் அழைத்து பேச நினைத்தான். அலைபேசியை எடுக்க தயங்கினாள் அவள். அதற்குள் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. அவன் விடுவதாக இல்லை. அடுத்த முறையும் அழைத்தான். இணைப்பில் வந்தாள் ஜானு. குரலில் என்றும் இல்லாத தயக்கம் இருந்தது. “என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரி இல்லையா? மெசேஜ் ஏ காணோம்.”. என்றான் ராஜா. எதிர்முனையில் நிசப்தம் நிலவியது.
--விடாது தொடரும்...

No comments:

Post a Comment