விடாது காதல் பாகம் 8விடாது காதல் பாகம் 8


                வீட்டிற்கு சென்ற ராஜா இரவு தூங்காத களைப்பில் நன்கு உறங்கினான். நாளை மறுநாள் புதுமனை புகுவிழா என்பதால் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தது. அதனால் கல்லூரிக்கு செல்லவில்லை. எவ்வளவு அதிக வேலையாக இருந்தாலும் தன் ஜானுவை மறக்க முடியுமா? எழுந்ததும் முதல் வேலையாக ஜானுவை அழைத்தான். அவளும் இரவு தூக்கம் இல்லாததால் அன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள். எந்த ஒரு விஷயமும் இல்லாமல் அரை மணி நேரமாவது பேசுவது காதலர்களுக்கு வழக்கமான விஷயம் தானே. அன்றும் அப்பிடி தான். “சரி ஜானு..அப்பா எனக்கு வெளியில வேலை கொடுத்திருக்கார். நான் வெளிய கிளம்புறேன். நீ ஃப்ரீ யா இருக்கும் போது மெசேஜ் பண்ணு” என்று சொல்லி இணைப்பை துண்டித்தான் ராஜா.
அன்றைய பொழுது வேலை நெருக்கடியிலே கழிந்தது. மறுநாளே வீட்டிற்கு நெருங்கிய உறவினர்களும், சினேகிதர்களும் வர வீடே கோலாகலமாக இருந்தது. இருப்பினும் ராஜாவின் மனதிற்குள் ஒரு வருத்தம். எவ்வளவு பேர் வந்தாலும் வீட்டின் மருமகள் வரவில்லையே என்ற குறை தான். ஜானுவும் வந்திருந்தாள் நிறைவாக இருந்திருக்கும் என அவன் மனம் ஏங்கியது.
அன்றும் அவனுக்கு வேலை அதிகமே. பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று சிலரை அழைத்து வர அவ்வப்போது சென்று கொண்டிருந்தான். அப்போது அவர்களின் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களான சந்திரசேகர், மாலதி தம்பதியினர் வந்திருந்தனர். ராஜாவின் சிறு வயதில் பக்கத்து வீட்டில் வசித்த அவர்கள் ராஜாவின் குடும்பத்திற்கு மிக நெருக்கம். ராஜாவும், அவன் தங்கை ஷாலினியும் அத்தை, மாமா என்றே பாசத்துடன் அழைப்பர். இருவரின் வீட்டு அனைத்து விசேஷங்களுக்கும் தவறாமல் கலந்து கொள்ளும் அளவிற்கு மிக நெருக்கம். 6 வருடத்திக்கு முன் வேலை மாறுதல் காரணமாக அவர்கள் வேறு ஊருக்கு செல்லும் படி ஆனது.
ராஜாவின் அப்பா சசிக்குமார் அவர்களை வரவேற்று நலம் விசாரித்து கொண்டிருக்கையில் ஷாலினியும் வந்து உரையாடலில் கலந்தாள்.சில நிமிடங்களிலேயே வெளியில் சென்றிருந்த ராஜாவும் அங்கு வந்தான். சந்திரசேகர், ”என்ன ராஜா? எப்பிடி இருக்க? படிப்பெல்லாம் எப்பிடி போகுது என விசாரித்தார். “:நல்ல போகுது மாமா”. அதற்குள் ராஜாவின் அம்மா அம்பிகா கையில் குளிர்பானத்துடன் அங்கு வந்தாள். அம்பிகாவைப் பார்த்த மாலதி, “ என்ன இப்பிடி இளைசுட்டே போற டி?” என்று கேட்க, “நீண்ட நாட்களுக்கு பிறகு பார்பதால் உனக்கு அப்படி தோணுது” என்று சமாளித்தாள் அம்பிகா. அப்போது ஷாலினி குறுக்கிட்டாள். "சங்கரி எங்க அத்தை? கூட்டிட்டு வரலையா?". “அதை சொல்ல தான் நினைத்தேன்” என்றார் சந்திரசேகர். “அவள் விடுதியில் இருந்து வருவதால் நேராக இங்கே வந்துறேன் என சொன்னாள். இன்னும் 1 மணி நேரத்திற்குள் அவள் பேருந்து நிலையத்தை அடைந்து விடுவாள். நான் சென்று அவளை அழைத்து வருகிறேன்” என்று கிளம்பிய அவரை சசி தடுத்தார். “அதெல்லாம் ராஜா பாத்துப்பான். நீ எங்கயும் போக வேணாம்” என்றார். ராஜாவை அழைத்து சங்கரியை போய் அழைத்து வரும்படி கூற அப்பா பேச்சை தட்ட முடியாமல் சென்றான்.
வழியில் சிறு வயது ஞாபகங்கள் அவன் மனதில் ஓடியது. ஷாலினியின் வயதே சங்கரிக்கு. சங்கரி வீட்டுக்கு வந்தாலே ராஜாவை கேலி, கிண்டல் செய்து கொண்டே இருப்பாள். சங்கரி வந்தாலே வெளியில் கிளம்பி விடுவான். காரணம் ஏதுமின்றி அவளிடம் சரியாக பேசியதே இல்லை. அதனால் தான் அழைத்து வர தயங்கினான். பேருந்து நிலையத்தை அடைந்ததும் சந்திரசேகர் சொன்ன இடத்தில் அவளுக்காக காத்திருந்தான் ராஜா.
--விடாது தொடரும்...

No comments:

Post a Comment