Thursday, February 7, 2013

சர்ச்சைகளை மீறி அசத்தும் விஸ்வரூபம்... கமல் நடிப்புக்கு ஒரு சபாஷ்...


 
விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைகளை கொஞ்சம் மறந்துவிட்டு பார்த்தால், கமலின் புதிய பரிமாணம் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. 
 
ஒரு இயக்குநராக ஹேராமிலேயே தனது 'க்ளாஸ்'ஐ நிரூபித்துவிட்டவர் கமல். அவரது நடிப்புக்கு புதிதாக சான்றிதழ் தேவையில்லைதான். ஆனால் விஸ்வரூபத்தில் அந்த கதக் கலைஞராக வரும் முதல் 30 நிமிடங்களைப் பார்க்கும் எந்த சக கலைஞரும் கமலை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவு மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல். 
 
குறிப்பாக 'உன்னைக் காணாத..' பாடலின் வரிகளுக்கு, இசைக்கு கமல் தரும் பாவங்கள் இருக்கிறதே.. அந்த கதக் மாஸ்டரே எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டியதாக வந்த செய்திகளில் கொஞ்சமும் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
 
கமல்ஹாஸன் நடையை எத்தனையோ படங்களில், எத்தனையோ விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க வீதிகளில் ஒரு நடனப் பெண்ணின் நளினத்தோடு நடந்து செல்வார் பாருங்கள்... ஏபிசி என அத்தனை க்ளாஸ் ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளும் நடிப்பு அது. 
 
முதல் 30 நிமிடங்கள் ஒரு நாட்டியக் கலைஞனாகவே மாறிவிட்டார் கமல். போனை எடுக்க வரும்போது ஒரு நடை நடக்கிறார், சாலையில் ஓடும்போது, பேசும்போது காட்டும் முகபாவம், குரல், விரல்களால் முடியைக் கோதும்போது, கண்களில் நளினம் காட்டும்போது என மிக நுண்ணியமான விஷயங்களில் மிக மிக பிரயாசைப்பட்டு தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 
 
அதே போல நாட்டியக் கலைஞன் என்ற மறைப்பிலிருந்து அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிக்காட்டும் சூழல், அதை அவர் உணர்த்தும் விதம்... நடிப்புக்கு தனி இலக்கணமே சொல்கிறது. மென்மை நடிப்பு மட்டுமல்ல... மிரளவைக்கும் ஆக்ஷனிலும் தனது நடிப்பு உலகத் தரம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கமல். 
 
ஜேம்ஸ்பாண்ட், இங்கிலாந்து துப்பறியும் நிபுணர் போல... இந்திய சினிமாவுக்கு கமல் ஒரு உதாரண கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல. 
 
இந்த விஸ்வரூபத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கமல் எனும் அற்புதமான நடிகனே என்பது ரசிகர்களின், விமர்சகர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு!

No comments:

Post a Comment