Saturday, December 22, 2012

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு: சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் தெண்டுல்கர் , சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதனை உறுதி செய்துள்ளது. ஒருநாள் போட்டிக்கான  உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம், தமது கனவு நிறைவேறியுள்ளதாக பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி மற்றும் வீரர்களுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
உலகிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் சச்சின் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சமீப காலமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சலசலக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.சி.ச.ஐ.,க்கு கடிதம் எழுதியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளார். சச்சின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பலத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

      சாதனை நாயகன் சச்சின் :39 வயதான சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் விளையாடினார். கடைசியாக அவர் விளையாடிய போட்டி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியாகும்.
இதுவரை 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 18,463 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும்.
ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை அவரையே சேரும். 62 முறை ஆட்டநாயகன் விருதும், 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் 2016 பவுண்டரிகளை விளாசி முதலிடத்தில் இருக்கிறார் சச்சின்.
மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த ஜோடி பிரிவிலும் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். 1999ம் ஆண்டு நியூசிலந்துக்கு எதிரான போட்டியில் சச்சின்-டிராவிட் ஜோடி 331 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment