விடாது காதல் பாகம் 5

விடாது காதல் பாகம் 5


                        மறுநாள் காலை ராஜா நண்பனின் வீட்டிற்கு சென்று, முதன் முதலாக காதலியை சந்திக்கும் ஆர்வத்தோடு கிளம்பினான். ஜான்சிக்கு பிடித்த நீல நிறத்தில் சட்டை அணிந்துக் கொண்டான். வழக்கத்தை விட சற்று அதிக வசீகரமாகவே இருந்தான். ஜான்சிக்கு ராஜா தன்னை சந்திக்க வருவது பற்றி தெரியாது. எந்த முன் அறிவிப்பும் இன்றி இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்து அவளிடம் ஏதும் கூறவில்லை ராஜா. வார இறுதி விடுமுறை நாட்கள் என்றாலே ஜான்சிக்கு தன் தோழிகளுடன் வெளியில் செல்வது வழக்கம்.
ராஜா எப்பொழுதும் போல குறுஞ்செய்தி மூலம் ஜான்சியிடம் தொடர்பிலேயே இருந்தான். அதன் மூலம் அவள் எங்கு இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை தெரிந்து கொண்டான். இவை அனைத்தும் ராஜா எப்பொழுதும் கேட்கிற கேள்விகள் தான் என்பதால் ஜான்சிக்கு சிறு சந்தேகம் கூட வரவில்லை. ஜான்சி தன் தோழி பவித்ராவுடன் தி.நகரில் ஒரு பிரபல துணிக்கடை ஒன்றில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட ராஜா அவன் நண்பன் பிரகாஷ் உடன் மின்ரயிலில் மாம்பலம் ரயில் நிலையத்தை அடைந்தான்.
அங்கிருந்து நடந்து செல்லும் தூரம் தான் என்பதால் 5 நிமிடத்தில் அந்த கடைக்கு சென்றார்கள். அங்கு சென்று அனைத்து தளங்களிலும் தேடியும் ஜான்சியை காணவில்லை. உடனே அலைபேசியை எடுத்து “பர்சேஸ் முடிந்ததா?” என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான். அவளிடம் இருந்து வந்த பதிலை படித்த அவனுக்கு ஏமாற்றமே!! அவள் தன் வேலையை முடித்து விட்டு அவன் இறங்கிய ரயிலில் தான் ஏறி கடற்கரை சென்றாள் என்பதை தெரிந்துக் கொண்டான். ராஜாவும், பிரகாஷும் அடுத்த ரயிலிலே கடற்கரைக்கு விரைந்தார்கள்.
ஜான்சியும், பவித்ராவும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் அருகே மற்றொரு தோழியுடன் பேசிக்கொண்டிருப்பதை தெரிந்து கொண்டான் ராஜா. அங்கு சென்ற அவன் அவளை கண்டுக்கொண்டான். ஜான்சி தன் தோழிகளுடன் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். பேச்சு சுவாரசியத்தில் அருகில் இருக்கும் எவரையும் தோழிகள் மூவருமே கண்டு கொள்ளவில்லை. ராஜாவும் மூன்றாவது மனிதனாகவே நின்று அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் அங்கிருந்து நடந்து சென்று கடற்கரையில் மூவரும் அலைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர். பிரகாஷ், ராஜாவை அவளிடம் சென்று பேசும் படி கூறிக்கொண்டே இருக்க, அவனோ அவள் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் கடுப்பான பிரகாஷ் “ஏங்க ஜான்சி!!” என்று அழைக்க, அவளும் திரும்பி பார்த்தாள். ஆனால் அடையாளம் தெரியாத ஒருவன் தன்னை ஏன் அழைக்கிறான் என்று குழம்பிக் கொண்டிருக்கையில் அருகில் இருந்த ராஜாவை பார்த்து புன்னகை பூத்தாள் ஜான்சி.
  விடாது தொடரும்

 

No comments:

Post a Comment